Sunday, December 5, 2010

கவிதை

நீதி தேவைதையே!!!!!!
 
நீதி தேவைதையே!
உன் வலக்கையில் வாளை ஏந்து
உன் வாள் உன் கண் கட்டை முதலில் அறுக்கட்டும்
பிறகு பார் உன் கையில் உள்ள தராசு சமமாக இல்லை என்பது புரியும்....
 
சட்டம்
 
சட்டம் ஒரு இருட்டறை என்கிறார்கள்....
சுதந்திரத்தை தொலைத்த இடம் அதுதானோ ??? 

என்னை பற்றி......

MAY GOD'S PEACE BE UPON U ALL !!!!!!!!!! 
என்னை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என்று கூற மாட்டேன். ஏன் எனில் என்னை பற்றி எனக்கு மட்டுமே தெரியும்..... நான் கூறினால் ஒழிய பிறருக்கு தெரியாது இல்லையா?
திருவண்ணமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் instrumentation படித்து முடித்துள்ளேன்
,..... கிரிக்கெட் மட்டை கூட பிடிக்க தெரியாத அளவுக்கு விளையாட்டில் அனுபவம் உள்ளவன் ,,,,
ஆனால் மனித மனங்களை முடிந்தவரை படிக்க தெரிந்த சாமான்யன்.....
psychology  மீது பைத்தியம் பிடித்தவன்,,,,,, 
பேச்சாற்றலை இறைவன் ஓரளவுக்கு கொடுத்து வைத்தான் 
முதல் முதலாக வலைப்பூவில் பதியும் யோசனை தந்த நண்பர்களுக்கு நன்றிகள்.... 
நான் கற்று கொண்டதையும் பெற்று கொண்டதையும் பதிவு செய்கிறேன்,,,,,
எனது எண்ணங்கள் உங்களது விழிகளில்.... தவறுகள் இருப்பின் திருத்துவீர்....
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்,,,,,,,,,,,,, நூறு கோடியில் ஒருவன் 
மன்னிக்கவும் நூற்றிமுப்பது கோடியில்(விரைவில் அதிகரிக்கப்படும்) ஒருவன்........
 வருகை புரியும்  அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்........

வீட்டோ அதிகாரம் பெற்று இந்தியா உலக வல்லரசாகுமா?

            300 மில்லியன் மக்கள் பொருளாதார உச்சத்தில் இருக்க 800 மில்லியன் மக்களைப் பாதாளத்தில் வைத்துக்கொண்டு வல்லரசுக் கனவு காணும் இந்தியா தன் இலக்கைத் தொடுமா?
அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடுகளில் பொருளாதார மந்தம் தலைதூக்கி பெரிய விளைவைக் கொடுக்கும் இன்றைய காலகட்டத்தில் உலகின் முக்கிய நாடுகளான சீனா, இந்தியா, பிரேஸில், தென்னாபிரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சியடைந்து வருவதை எம் கண் மூலம் பார்க்க முடிகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மின்னல் வேகத்தில் போவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் ஊடாக ஒரு வல்லரசு ஸ்தானத்திற்கு அது வருமா என்பதைப் பார்ப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இந்தியா, சீனா இரு நாடுகளும் மக்கள் தொகையில் போட்டி போட்டு இறுதியில் இந்தியா, சீனாவின் சனத்தொகையைத் தாண்டியது. இதேபோன்று இராணுவப் பலத்திலும் சீனாவைத் தாண்டுமா என அவதானித்தால் அது தற்போதைக்கு முடியாத காரியமாக இந்தியாவிற்கு உள்ளது. அணுவாயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ் , சீனா, இஸ்ரேல் , இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா சிலவேளை ஈரான் போன்ற அனைத்து நாடுகளும் உலகத்தின் வல்லரசு நாடுகள் எனக் கூறமுடியாது. இங்கே தெற்காசியாவில் உள்ள சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வீத அணுவாயுதத்தை வைத்திருந்தாலும் இவற்றை அடிப்படையாக வைத்து இந்தியா ஒரு இராணுவ வல்லரசு என்று கூற முடியாது.
300 மில்லியன் செல்வந்தர்கள்
இந்தியாவின் திறந்த பொருளாதாரக் கொள்கை இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தாலும் தற்போதைய வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பதே உண்மை.
இந்தியாவின் சனத்தொகையில் 1100 மில்லியன் மக்களில் 300 மில்லியன் மக்கள் சராசரி ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளார்கள் எனவும் இதில் பெரும்பாலானோர் மிகவும் வசதியாக வாழ்வதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த 300 மில்லியன் மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த மக்கள் அமெரிக்காவின் சந்தையின் தரத்துக்கு ஈடுகொடுப்பவர்களாய் உள்ளார்கள். உதாரணமாக ஒன்றைக் கூறினால் மருத்துவத்துறை, விவசாயத்துறை, கணினித்துறை, வரை, கோல் சென்டர் மூலம் தமது புதிய கண்டுபிடிப்புகள் , நோய்களின் அறிகுறிகள், ஸ்கானிங் ஆய்வுகள், ஆலோசனைகளை நேரடியாக இந்தியாவில் இருந்து ஏனைய உலக நாடுகளுக்கு வழங்குவதில் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளார்கள்.
அமெரிக்காவின் வைத்தியசாலையில் உள்ள ஒரு நோயாளியின் ஸ்கானிங் எடுத்த கையுடன் இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றது. இந்தியாவில் கோல் மையங்களில் அமைந்திருக்கும் வைத்தியர்கள் இந்த ஸ்கானிங், படத்தைப் பார்த்து நேரடியாகவே சம்பந்தப்பட்டவரின் விடயங்களை அறிவிக்கின்றனர். இதன் பின்னர் அமெரிக்க வைத்தியசாலை இவர்களுக்குரிய சம்பளத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவில் கல்வி கற்ற ஆறு இலட்சம் வைத்தியர்கள் உலக நாடுகளில் பணிபுரிவதும் இன்னும் பல தரப்பட்ட துறைகளில் கல்வி பயின்ற பல இலட்சக்கணக்கான மக்கள் உலக நாடுகளில் தொழில் புரிவதையும் காண முடிகின்றது. என்னடா இது அமெரிக்காவில் வைத்தியர்கள் இல்லையா, ஸ்கானிங்கைப் பார்த்துச் சொல்லமாட்டார்களா என்ற கேள்விகூட வரலாம். தற்போதைய உலகப் பொருளாதார மையத்தில் சந்தையும் விலையும் பொருளை எங்கே வாங்குவது என்று முடிவு செய்யப்படுகின்றது.
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஒரே விதமான சலுகை இருந்தாலும் விலை அல்லது ஊதியம் என்று வரும் பட்சத்தில் இந்திய வைத்தியர்களின் ஊதியம் அமெரிக்க வைத்தியர்களின் ஊதியத்தைவிடப் பல மடங்கு குறைவாகவே இருப்பதனால் அமெரிக்க வைத்தியசாலைகள் இந்திய வைத்தியர்களை தமது ஆய்வுகள், வைத்தியத்திற்குப் பாவிப்பது இங்கு இயல்பான விடயமே.
மேலே கூறப்பட்ட உதாரணம் மாதிரி பல துறைகளில் கல்வி கற்றவர்கள் தமது அறிவை பண்டமாற்றம் வேறு செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இதன்மூலம் இந்தியாவிற்குள் செல்வந்தம் வரத்தொடங்கியுள்ளது. இந்த செல்வந்தத்தின் பிரதிபலிப்பை இந்தியாவின் பல மாநிலங்களிலும் தற்போது பார்க்கக்கூடியதாகவுள்ளது. அமெரிக்காவில் கோலிவூட்டில் வசிப்பவர்களின் வீடுகள், வாகனங்கள் போன்று பல் மடங்கு வசதிகளுடன் இந்தியாவிலும் வரத்தொடங்கியுள்ளது. இப்படியான ஆடம்பரமான வீடுகள் முன்பு இருந்தாலும் தற்போது பல இடங்களில் புதிது புதிதாகக் காணிகள் வீடுகளாக மாறுவதும் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் இருப்பிடங்கள், ஆங்காங்கே நீச்சல் குளங்கள் உருவாவதையும் பார்க்க முடிகின்றது. இந்தச் செல்வந்தர்களின் அன்றாட வாங்கும் திறமை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே போகின்றது.
இன்னுமொரு உதாரணத்தைப் பார்ப்போமாயின், இந்தியாவின் பியர் கம்பனியான கிங் பிச்சர் நிறுவனத்தின் அதிபர் மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் ஒரு பெரிய செல்வந்தராகவும் உலகத்தில் மதிக்கப்படுபவராகவும் விளங்குகிறார். ஆரம்பத்தில் பியர் தொழிற்சாலையில் ஆரம்பித்து தற்போது கட்டிடங்கள் விற்றல், கிங் பிச்சர் என்ற விமானசேவை போன்றவற்றை நடத்தும் அளவுக்கு மிகவும் உயர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தின் கிங் பிச்சர் பியர் இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் விற்பனையில் முன்னிலையிலும் உள்ளது. எனவே, இந்த 300 மில்லியன் மக்கள் இந்தியாவின் அரசியல் , பொருளாதார , சமூகத்திலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவார்கள், வந்துள்ளனர்.
சினிமா, தொலைக்காட்சி, கணினி,
கைத்தொலைபேசி
தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தும் பல நிறுவனங்கள் இன்று அரசியல் கட்சிகளுக்குப் பக்கபலமாய் நிற்பதோடு மட்டுமல்லாமல் சில கட்சிகள் கூட ஊடகத்துறையை தமது கையின் கீழ் கொண்டு வந்துள்ளது மட்டுமன்றி, தமது எதிர்கால அரசியல் நலன்களுக்காகவும் பாவிக்கின்றனர். இந்தத் துறையில் கூட பல நிறுவனங்கள் என்றும் இல்லாத அளவுக்கு செல்வந்தத்தைச் சேர்த்துள்ளார்கள்.
800 மில்லியன் மக்களின் எதிர்காலம்
300 மில்லியன் மக்கள் இப்படி ஓகோ என வாழ்ந்து கொண்டு இருக்கும் இதே இந்தியாவில் 800 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தமது சீவியத்தை நாளாந்தம் நடத்திக் கொண்டுள்ளனர். இது என்ன 800 மில்லியன் மக்களா கஷ்டப்படுகிறார்கள் என வியப்பாகக்கூட இருக்கலாம் . ஆனால், இதுதான் இன்றைய இந்தியா என ஒரு வார்த்தையில் கூற முடியாது.
மத்திய அரசு, மாநில அரசு, தேர்தல், அரசாங்கம், அதிகாரம் எனவரும் பொழுது இந்த 800 மில்லியன் மக்களின் முடிவுகளிலும் பெரும்பாலும் அரசியல்வாதிகள் தங்கி இருப்பதால், இவர்களை இலகுவில் தூக்கி எறிய முடியாத நிலைகூட இங்கு உண்டு. எனவே, தற்போதைய அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் விவசாய உற்பத்திக்கு அதிக நிதிகளை ஒதுக்கி இருந்தாலும் சரி, சத்துணவுத் திட்டத்தை நிறைவேற்றி இருந்தாலும் சரி, 800 மில்லியன் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதாக இங்கு இல்லை. எனவே, இந்தியாவில் தற்போதும் வருங்காலங்களிலும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் இன்னும் பெரிய இடைவெளி உருவாகுவதோடு நிற்காமல் இது முன்னைய தென்னாபிரிக்கா அப்பாட்ரைற் போன்று உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது ஒரு கடுமையான வார்த்தையாக இருந்தாலும் இப்படி நடக்காது என உறுதியாக முடியாது. அரசியல்வாதிகள் இலவசமாகத் தொலைக்காட்சி வழங்கி, தங்களின் கருத்துகளை மிக இலகுவாகப் பாமர மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றனர். இது தற்போது அரசியல்வாதிகளுக்கு சிறந்த விடயமாக இருந்தாலும் தொலைக்காட்சி வேலை செய்யாதபோது பாமர மக்கள் விழித்துக்கொள்வார்களா என்பதும் இங்கு சந்தேகமே.
இந்தியாவிற்குள் வரும் செல்வத்தை சரியான முறையில் அனைத்து மக்களும் நுகரும் தன்மையை அதிகாரத்தில் உள்ளவர்கள் வழங்காவிடின் இந்த வறுமைப் போக்குத் தொடர்ந்து நீடிக்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பது அரசாங்கத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான வரிப்பணத்தைச் செல்வந்தர்களிடமிருந்து பெறுதல் என்பதே இதன் அர்த்தமாகும்.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்
என்றும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் செய்வதையும் இராணுவப் பயிற்சிகள் செய்வதையும் இந்தக் கால கட்டங்களில் அவதானிக்க முடியும். கடைசியாக இந்தியாவிற்கு வந்துபோன இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரோன் கூட பல திட்டங்களுடன் இந்தியாவிற்கு வந்தும் பெரிய அளவிலான ஒப்பந்தங்களை இவரால் செய்ய முடியவில்லை. இந்தியாவின் தொலைபேசி, கணினி, பாதைகள் அமைத்தல் சம்பந்தமான விடயங்களில் தமக்கும் இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என டேவிட் கமரோன் வலியுறுத்தியதோடு நிற்காமல் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள், பிரித்தானியாவில் பெரிய துறைகளில் பணிபுரிகின்றனர் எனவும் குறிப்பிட்டார். ஆனால், இந்தியாவோ உடனடியாக இது சம்பந்தமான விடயங்களுக்குப் பச்சைக்கொடி இன்னும் காட்டவில்லை.
இந்தியா கடந்த சில வருடங்களாக தமது ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியை கண்டாலும், ஏனைய நாட்டு இறக்குமதிப் பொருட்கள், ஏனைய நாடுகள் இந்தியாவில் சந்தைப்படுத்தல் போன்றவை மிக ஆமை வேகத்தில் அல்லது அனுமதி மறுக்கப்படுவதையும் ஏனைய நாடுகள் இங்கு சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இதே ஒத்த நிபந்தனைகள், மறுப்புகள், ஐரோப்பிய சந்தைகளிலும் இருப்பதால் இதை ஒரு சந்தை சம்பந்தமான போட்டி விடயமாக நோக்குவதே இங்கு முக்கியமானதாகும்.
ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம்
எமது நாடு என்றும் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார ரீதியில் உலகத்தின் பல இடங்களில் எம்மால் போட்டி போட முடிகின்றது. நாம் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். போரில் வல்லமை படைத்த நாடு. எனவே, எமக்கு ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் தர வேண்டும் என்பதே இந்தியாவின் வேண்டுகோளாகும்.
இதேபோன்று, பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் பிரேசில், தென்னாபிரிக்கா நாடுகளும் தமக்கும் வீற்றோ அதிகாரம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
இந்தியா இதற்கும் ஒரு படி மேல் சென்று இராஜதந்திர மட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அனுசரணையை நாடியுள்ளனர். தற்போதைய வீற்றோ அதிகாரத்தில் உள்ள நாடுகளை மாற்றவேண்டும் எனவும், இல்லாவிடில் வீட்டோ அதிகார நாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டவேண்டும் எனவும் இந்தியா கேட்டுள்ளது. ஆனால், தற்போது வீட்டோ அதிகாரத்தை வைத்திருக்கும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் இந்த விடயம் சம்பந்தமாகத் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றனர். எனவே, ஐ.நா.வில் இங்கிலாந்து அதிகார விடயத்தில் இதுவரை இந்தியாவிற்கு வெற்றிகிடைக்கவில்லை என்றாலும், இந்தியா இந்த விடயத்தில் தமது இராஜதந்திரக் கதவுகளைத் தொடர்ந்தும் திறந்தே வைத்துள்ளது.
300 மில்லியன் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி இந்திய நாட்டுக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுப்பதோடு நிற்காமல் இந்தியாவைத் தேடி ஏனைய உலக நாடுகள் போட்டி போடுவதைப் பார்க்கும் பொழுது இந்திய மக்களின் கல்வி, திறமைக்கு அப்பால் மலிவாக இந்தியாவில் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் இது இன்றைய திறந்த பொருளாதார முறையில், பல நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் ஒரு சந்தை சம்பந்தமானது என்றும் கூறலாம்.
300 மில்லியன் மக்களின் வளர்ச்சி அனல் வேகத்தில் போவதால் இதே நாட்டில் உள்ள 800 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஏதோ விதத்தில் மறைக்கப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, இதை அடிப்படையாக வைத்து இந்தியாவை தற்போதைய நிலையில் ஒரு பொருளாதார ரீதியில் ஒரு வல்லரசு என்று கூறுவதில் தப்பொன்றும் இல்லை. ஆனால், சமூக அரசியல் பாதுகாப்பு என்று வரும்பொழுது இந்தியா ஒரு வல்லரசு எனத் தற்பொழுது கூற முடியாது. ஆனால், இந்த அத்தஸ்தைப் பெறுவதற்கு இந்தியா தொடர்ந்தும் முயற்சிசெய்யும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி: உலக தமிழ் இணையம்

Sunday, November 7, 2010

ரசிகர்மன்றங்கள் - முட்டாள்களின் கூடாரம்

ரசிகர்மன்றங்கள் - முட்டாள்களின் கூடாரம்

அறிமுகமில்லாத, முகவரிதெரியாத பல திரைப்பட நடிகை, நடிகர்களின் புகைப்படங்களை இன்றைய இளைஞர்களில் 100-க்கு 75% பேர் தம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டுள்ளனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் இத்தகைய கேவலத்தை தொடருகின்றனர். யார் அவர்கள்? அவர்களின் சிறப்புத்தகுதிகள் என்ன? அவர்கள் நம்மிடமிருந்து எவ்வித்தில் வேறுபடுகின்றனர்? இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் பதில் "பெரிதாக ஒன்றுமில்லை" என்பதாகத் தான் இருக்கும். அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே தவிர! ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. ஆம்!!! இத்தகைய கற்பனையில்தாம் இன்றைய இளைஞர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கிறது போலும் அவர்களைப்பற்றி!?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைப் போல அவர்களுக்கும் 'நடிப்பு' ஒரு தொழில் அவ்வளவு தான். இதை மறந்து நம்மவர்கள் அவர்களைப் பற்றி ஏதோ பெரிய தலைவர்களைப் போல் கற்பனை செய்துகொண்டு பைத்தியக்காரணத்தனமாக அவர்களை பின்பற்றுவது மிகவும் வெட்கத்திற்கு உரியது.
அனைத்து ஊர்களிலும் எங்கு காணினும் பல நடிகர்களின் ரசிகர் மன்றப் பலாகைகள். இவர்களின் தொழில் என்ன? ஏதேனும், அந்த நடிகரின் புது திரைப்படம் வெளிவந்தால் கட்-அவுட் வைப்பது, பத்திரிக்கை அடித்து விளம்பரப்படுத்துவது........... இல்லையெனில், எப்போதாவது இரத்ததானம், கண்தானம் போன்றவற்றைச் செய்வது(எவருடைய பெயரையோச் சொல்லி?). அவர்களின் பல நடவடிக்கைகள் தேவையில்லாதவனவாகவும், சில (இரத்ததானம், கண்தானம் ) பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. இருப்பினும் அனைத்து ரசிகர் மன்றங்களும் இத்தகைய இரத்ததானம், கண்தானம் போன்றவற்றில் ஈடுபடுவது கிடையாது. சில மட்டும்தான். மற்றவை அனைத்தும் வேண்டாத வெட்டி விளம்பரத்திற்காகத் செயல்படுகின்றன என்பது மறுத்தற்கியாலாத ஒன்று.
இவர்களின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கின் அத்தனையும் வெறும் விளம்பரத்திற்காக, விளம்பரத்திற்காக மட்டுமே. தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே. அதேசமயம் இவர்களில் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தமக்குப் பிடித்த நடிகர்களின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதனும் இத்தகைய இழிச்செயலை செய்ய மாட்டான். மீறியும் கொண்டாடுபவர்களை சுயபுத்தியில்லாதவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும். தம் பெற்றோரின் பிறந்த நாள் (அ) திருமண நாள் கூட இவர்களுக்குத் தெரிந்திருக்காது.உங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்?....
உங்கள் பெற்றோரிடம் நீங்கள் ஆசையாக பேசியதுண்டா? உங்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டதுண்டா? உங்களையே நம்பிவந்த மனைவிக்கும், உங்களின் பாசத்தை, அரவணைப்பை என்றும் எதிர்பார்க்கும் குழந்தகளிடம் நட்பாக நடந்துகொண்டதுண்டா?உங்களில் எத்தனை பேர் மேற்கூறியவற்றுக்கு "ஆம்" என்று பதிலளிக்க முடியும்? அறிமுகமில்லாத ஒருவருக்காக, தொடர்பே இல்லாத ஒருவருக்காக நீங்கள் எதற்காக இவ்வளவு பணத்தை வெட்டியாய் வீண்செலவு செய்கிறீர்கள். அதனால் நீங்கள் அடைந்த லாபம்தான் என்ன? உங்களுக்கு அதனால் சிறிதளவேனும் மகிழ்ச்சி கிடைத்ததா நிரந்தரமாக எண்ணிப்பார்க்கும் அளவுக்கு!!! இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களோ அவர்களுக்காக மண்சோறு சாப்பிடுகின்றீர்கள். என்னவென்று சொல்வது உங்களைப் பற்றி?
 உங்களைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் வறுமையில் வாடி, வறுமையின் விளிம்பில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக நீங்கள் ஏதேனும் செய்ததுண்டா?(Atleast) அவர்கள் மீது இரக்கப்பட்டதாவதுண்டா?
யார் அந்த நடிகர்கள்? உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு, தொடர்பு? உங்களுக்காக அவர் என்ன செய்துள்ளார்? இதுவரை வந்த நடிகர்களும், இனி வரப்போகும் நடிகர்களும் இந்த மக்களின் முட்டாள்தனத்தை தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, அனைவரின் முகத்திலும் கரியைப் பூசிவிடுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்காது என நினைக்கிறேன். காரணம், உண்மை அதுதான்.
விளம்பர நோக்கில்லாமல், தன்னலம் கருதாமல், யாரையும் மிகைப் படுத்தாமல் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு ரசிகர் மன்றம் செயல்படுகிறதா எனில், இந்தியா ஒன்று கூட கிடையாது. எத்தனை மாமேதைகள், தலைவர்கள் தங்களுடைய சுகதுக்கங்களை துறந்து, தம் பெற்றோர்,மனைவி, மக்கள் என எல்லோரையும் இழந்து, நாட்டிற்காக அரும்பாடுபட்டு, இரத்தம் சிந்தி, தம் இன்னுயிரையும் ஈந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன? ஏன் அவர்களைப் பற்றிய சிறிய செய்திகளாவது தெரியுமா இவர்களுக்கு? அத்தனை உயர்ந்த தலைவர்களை மறந்துவிட்டு சிறுபிள்ளைத் தனமாக இவர்களின் பின்னால் செம்மறியாட்டு மந்தைப் போல தொடருவது எவ்வளவு கேவலத்துக்குரியது. மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அத்தகையப் பணியை தொடருவர்.
திரைப்படம் என்பது என்ன? அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் அவ்வளவுதான். இல்லையெனில் எப்போதாவது அரிதாக ஏதேனும் செய்தியைத் தரும் ஒரு ஊடகம் அவ்வளவுதான். இதனையெல்லாம் மறந்து நம் மக்கள், திரைப்படம் எனும் மாயையை யாரும் செய்யமுடியாத ஏதோ சாகச காட்சிகளைப் போல உணருகின்றனர். அது ஒரு கானல் நீர். அது ஒரு கற்பனை. அது ஒரு பொழுதுபோக்கு. கற்பனையை ,மாயையை , நிழலை நம்பும் மனிதர்களாக இவர்கள்? தன் அபிமான நடிகரின்மீது வெறிப்பிடித்து திரிகின்றனர். குருட்டுத் தனமாக அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களோ, இவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். இத்தகைய சூழல் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழலாகாது. நண்பர்களே கற்பனையிலிருந்து விலகி வாருங்கள். எதார்த்தத்தை நம்புங்கள். "2020-ல் இந்தியா ஒரு வல்லரசாகத் திகழும்" என்ற நம் குடியரசுத் தலைவரின் கனவு, இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. என் இனிய தோழர்களே! உண்மையாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கடமையினை எண்ணிப் பாருங்கள்.
திரைப்படங்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் அடிமையாகாதிர்கள். நாய்கள் அல்ல நீங்கள்! அவர்கள் போடும் கறித்துண்டிற்காக ஆசைப்படுவதற்கு. அனைத்தும் அறிந்த, பகுத்தறிவுமிக்க மனிதர்கள் நீங்கள். உங்களுக்கென்று ஒரு தனிப் பாணியை உருவாக்கிக் கொண்டு, இந்நாட்டிற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்காக உழையுங்கள். இந்தியாவை வல்லரசாக்குங்கள்.
என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது பத்திரிக்கைகளே. ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதே பத்திரிக்கைகள் தான். பத்திரிக்கைகள் நினைத்தால் நாட்டை எத்திசையிலும் திருப்பலாம். இவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ள பத்திரிக்கைகள் தங்களுடைய கடமையை மறந்து, சுயவிளம்பரத்திற்காக, வணிகத்தையே முதன்மையாகக் கொண்டு நடிகர்களை தேவையில்லாமல் அதிகமாக முன்னிலைப் படுத்துவது மிகுந்த வருத்தத்திற்குரியது.
இற்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் ஒரே தகவல்தொழில்நுட்ப ஊடகம் பத்திரிக்கைகள் தான். அத்தகைய பெருமைக்குரிய அவர்கள், தங்கள் கடமையினை உணர்ந்து, மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுடைய பங்கினை உணர்ந்து, செயல்பட்டால் இந்தியா 2020-ல் உறுதியாக வல்லரசாக மாறும். அதில் எவருக்கும் சந்தேகமிருக்காது.
ஒரு நாட்டின் முதுகெலும்பே பத்திரிக்கைகள் தான். அவர்கள் நினைத் தால், செயல்பட்டால் முடியாதது ஒன்றுமில்லை. பத்திரிக்கைகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது, இனியும் நடிகர், நடிகைகளுக்கு தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தாதிர்கள். அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்கிற நிலையில் மட்டுமே முன்னிலைப்படுத்துங்கள். அவர்கள்தான் இந்தியாவின் விடிவெள்ளி என்று முன்னிலைப்படுத்தாதிர்கள்.
எதனையுமே உடனடியாக நம்பிவிடும் இந்த மக்கள், பத்திரிக்கைகளால்(உங்களால்) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நீங்கள் முன்னிலைப்படுத்தும் நடிகர்களை நம்பி, இந்த மக்கள் பலமுறை ஏமாற்ற மடைந்துள்ளனர். இனியும் தொடரவேண்டாம் இந்த இழிநிலை. இந்தியாவின் வளர்ச்சியில் உங்கள் பங்கினை, கடமையினை உணர்ந்து செயல்படுங்கள். இந்தியாவை வல்லரசாக்குவதில் உதவிடுங்கள்.

Thursday, November 4, 2010

thoughts of a man working in IT

Thoughts of a man working in IT

மென்பொருள் நிறுவனத்தில் நான்

உலகம் என் கண்ணெதிரிலும், என் கை விரல்களிலும் தெரிகிறது. உலகின் மறு மூலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சந்திரனையும், செவ்வாயையும் கூட இங்கிருந்தே பார்க்க முடிகிறது. எல்லாம் என் அருகிலேயே இருக்கின்றன. குளிர்சாதனப்பெட்டியின் குளுமையான காற்று, சுத்தமான சூழ்நிலை,அறிவுமிகு மக்கள் உலககோடு தொடர்புகொள்ள இணையம், உறவோடு தொடர்புகொள்ள தொலைபேசி எல்லாம் என் அருகிலேயே.
தேவைக்கும் சற்று அதிகமான ஊதியம். மனம் விரும்புவதையெல்லாம் வாங்குவதற்கு ஒரு வாய்ப்பு. எழில்மிகு கட்டடங்கள் அதில் அழகுமிளிர் பெண்கள். சர்வதேச தரத்திலான வாழ்க்கை. இங்கே விமானம் பயணம் எந்த ஆச்சிரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்துவது கிடையாது. நாடு விட்டு நாடு சென்று பலதரப்பட்ட மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவது சாதாரண விஷயம். இங்கே கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கிறது. நாளும் ஒரு தொழில் நுட்பம் அறிமுகமாயிக் கொண்டேயிருக்கும் வேலையில் இங்கே எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சகமனிதர்களின் உதவியில்லாமல் இங்கே நீங்கள் சிறு துரும்பைக்கூட நகர்த்திவிட முடியாது. குழுவுடன் பணியாற்றும் தன்மை மிகவும் அவசியம். தலைமைப் பொறுப்பேற்க இங்கே யாரும் தயங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதற்கு இங்கே திறமையானவர்களால் பலத்த போட்டி நிலவுகிறது. திறமை குறைந்தவர்களை இங்கே பார்ப்பது மிக அபூர்வம். அவர்கள் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, களைந்தெறியப்பட்டு விடுகின்றனர். எல்லா நடவடிக்கைளிலும், 70 சதவீதத்திற்கு மேல் வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்கலாம்.

இனம், மொழி, நிறம், நாடு, ஆண், பெண் எவ்வித பாகுபாடும் கிடையாது. எல்லோரும் சமமாக நடத்தப்படுவதோடு தனிநபர் கருத்துக்களும் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

மேலும் இங்கே கற்றுக் கொள்வதற்கு யாருமே தயங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிக ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள வருகின்றனர். காரணம், பல சூழ்நிலைகளை, பல விஷயங்களை, கற்றுக்கொண்டால் தான் அடுத்த நிறுவனத்திற்கு செல்லும்போது பயனள்ளதாகவும், வசதியாகவும் இருக்கும் அதிக சம்பளத்தையும் கேட்டும் பெறலாம். இங்கே யாரையும் பேர் சொல்லி அழைக்கும் உரிமையுண்டு. அவர் நிறுவனத்தின் தலைவர் (Company Chairman) ஆக இருந்தாலும் சரி, முதன்மை நிர்வாக அதிகாரி(CEO)-வாக இருந்தாலும் சரி பெயர் சொல்லி அழைக்கலாம்.

திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள இங்கே அதிக மெனக்கிடக்கிறார்கள். மேலும், ஊதிய உயர்வு என்பது முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலேயே தவிர, சாதியின் அடிப்படையில் கிடையாது. இங்கே சாதியின் அடிப்படையில் மக்களை பாகுபடுத்துவதோ, வேற்றுமைபடுத்துவதோ துளியும் கிடையாது. திறமை மட்டுமே அளவுக்கோல், சாதி அல்ல. லஞ்சம், கையூட்டு, கூழ்கும்பிடு போன்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சிபாரிசு மட்டும் சில பல இடங்களில் பிராந்திய உணர்வு ஆங்காங்கே. இங்கே தொன்றுதொட்டு இருக்கும் ஒரே பிரச்சனை முன்னவர் (Senior) பின்னவர் (Junior) மாமியார், மருமகள் சண்டைப் போல.

அவரவர் வேலைகளில் அவரவர் மிகக் கவனமாகவே இருக்கின்றனர். தகல்களை கையாள்வதில் இங்கே அஜாக்கிரதை என்கிற பேச்சுக்கே இடமிருப்பதில்லை. எத்தகையை இயற்கை சீற்றங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொள்வதற்கு இவர்கள் எந்நேரத்திலும் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான வழிமுறைகள், பயிற்சிகள் தவறாமல் அளகிகப்படுகின்றன. இயல், இசை, நாடகம் மூன்றையும் கற்றுக்கொள்வதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இப்படி எல்லாம் இருந்தும் என் மனதில் ஒரு வெறுமை நிலவுகிறது. பல நூறு மைல்கள் அப்பால் இருக்கும் என் மனதில் சொத்து ஊரைப் பற்றியதான நினைவுகள் அலைப்போல் தாக்கி வருகின்றன.
நான் துள்ளி விளையாடிய அந்த கிராமத்து மண் சாலையை இன்று நான் பார்க்க விரும்புகிறேன். அந்த அரசுப் பள்ளிக்கூட கட்டிடங்கள், உலகை அறிமுகப்படுத்திய நூலகம், கோடையில் நீந்தி மகிழ்ந்த அந்த பாம்புக்கிணறு. ஆடிப்பதினெட்டிற்கு நடந்து செல்லும் அந்த முருகன் கோயில், வழியெங்கும் பொறுக்கித்தின்ன நாவல் பழங்கள, அருகிலுள்ள மலைக்குன்றுகளுக்கு சென்றால் சீத்தாப்பழங்கள், என எல்லாமும் என் கண்முன் நிழலாடுகின்றன. அந்த குதூகலமான கிராமத்து சாலையில் மாலை வேளையில் மிதிவண்டியில் தினமும் 3 கி.மீ பயணம் செய்து திரும்பும் அந்த அற்புதமான, மகிழ்ச்சிப் பயணத்தை வாழ்வில் என்றுமே மறக்க முடியாது. பன்மொழி பேசும் அந்த குட்டி இந்தியா தான் என் உலகத்தின் நிரந்திர சொர்க்கம்.

ஒரு விதமான தனிமையே இங்கே உணர்கிறேன். ஏதோ இழந்து விட்டதைப்போல, தொலைத்துவிட்டதைப்போல .எல்லாமிருந்தும் எதுவுமேயற்றது போலதொரு தனிமை. தனித்து விட்டிருப்பதாக ஒரு எண்ணம், எதை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஒரு கேள்வி? கசைந்து போகுதுமான ஒரு வாழ்க்கை. பொருள் ஈட்ட புறப்பட்டு பொருளற்ற வாழ்க்கையை தொடருவதாக ஒரு குற்ற உணர்ச்சி. இருளில் ஓவியம் தீட்டுவதைப் போல, இதயத்தை விற்று அன்பை வாங்க முயற்சிப்பதா என ஒரு கேள்வி. கால நதியின் கையில் நம்மை ஒப்படைத்தப்பிறகு, அதன் இழுத்த இழப்புக்கு செல்லத்தான் வேண்டும். எதிர் நீச்சல், இங்கே அவ்வளவு எளிமையானதல்ல. அதன் போக்கிலேயே சென்று கரையேறுவதுதான் புத்திசாலித்தனம், சுழலில் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் செயல்படுவோமேயானால், வசந்தம் மீண்டும் மலரும் என்ற நம்பிக்கையில் நாட்களை தொடருகிறேன்.