Thursday, June 19, 2014

ஆங்ரி பேர்ட்கள் சிட்டுக்குருவியை கொன்றுவிட்டன-கவிதை


காலச்சக்கரம் கண்டெடுத்த
கலியுக - மன்னிக்கவும்
கணினியுக மனிதனின் ஆறாம் விரல்,
 
இயல்பாய் மழையில் தலை மறைத்த கைகள்
இன்று மார்பை இறுக்கி அணைக்கின்றன
அலைபேசி அணையாமல் காக்க-
மனிதனின் ஒரு இயல்பையே மாற்றிவிட்டது இந்த மடு
 
அமெரிக்கவிற்கும் ஆண்டிபட்டிக்கும்
பாலம் கட்டியது,
ஆனால் அடுத்த வீட்டுக்காரனின்
முகம் பார்க்காமல் முடக்கியது
 
ஆயிரம் எண்களை
மனனம் செய்த மனம்
அண்ணன் தம்பி எண்ணை கூட 
Account contactஇல் தேடுகிறது.
 
ஓட மறுக்கும் கால்கள்
Temple Runனில் High Score எடுக்கின்றன.
ஆங்ரி பேர்ட்கள்
சிட்டுக்குருவியை கொன்றுவிட்டன.
 
இது காலத்தின் தேவையா
இல்லை காலம் இட்ட சாபமா?

இன்னும் கவிதையை முடிக்கவில்லை
“இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல..”
என்று என் அழைபேசி அழைக்கிறது...
 
மனிதன் கருவிகளை ஆளவில்லை
கருவிகளே மனிதனை ஆளுகின்றன என்பதற்கு
சாட்சி மணி அடித்து கொண்டிருக்கின்றது,
 
 என் கவிதையை காற்று வாங்கி போகவில்லை
இதோ இந்த கருவி வாங்கி போய்விட்டது

No comments:

Post a Comment